பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்துடனான பேட்டியின் முழுவடிவம்
M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்தை lankamuslim.org பேட்டி கண்டது இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றை நான்கு பகுதிகளாக பதிவு செய்திருந்தோம் தற்போது அந்த போட்டி முழுவதையும் பதிவு செய்கின்றோம்.
முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் அடிக்கடி முஸ்லிம் தேசியம் என்ற பிரயோகத்தை பயன்படுத்துபவராக நீங்கள் இருகின்றீர்கள் என்ற வகையில் முஸ்லிம் தேசியம் என்று எதை நீங்கள் அடையாளப் படுத்துகின்றீர்கள் ?
முதலில் நான் முஸ்லிம் தேசியம் மட்டுமல்ல எந்தவொரு தேசியத்திலும் நம்பிக்கைகொண்டவனல்ல , தேசிய வாதம் என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறாத ஒன்று. அது பாசிசத்துடன் தொடர்பானது. ஆனால் நீண்ட காலமாக இலங்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தேசியம் என்ற அடையாளத்தின் ஊடாகத்தான் முன்னெடுக்கப் பட்டு வந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தை அக்கியப்படுத்த, ஒன்றுபடுத்த தேசியவாத கண்ணோட்டம் அவசியப்பட்டதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம் .எச் .எம் .அஸ்ரப் அவர்கள் தனிக்கட்சி என்பதை முன்வைத்தார்.
இலங்கையில் முஸ்லிம் தேசியம் என்பது உச்ச நிலையில் இருந்த காலம் மாறி இன்று முஸ்லிம் தேசியம் வீழ்ச்சி நிலையில் உள்ளதாக உணரமுடிகின்றது, அதேநேரம் தமிழ் தேசியம், சிங்கள பெளத்த தேசியம் ஆகியன வீழ்ச்சியை நோக்கி செல்லவில்லை. இது தொடர்பாக உங்களின் பார்வை எப்படி உள்ளது ?
முஸ்லிம் தேசியம் என்ற அரசியல் இயக்க செயல்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தேசியம் என்பது ஒன்றுமையுடன் தொடர்பான விடயம் , தமிழ் தேசியம் நீண்ட காலமாக ஒரு கூட்டு முன்னணி அடிப்படையிலான ஒரு ஒற்றுமையின் ஊடாக செயலபட்டு வந்துள்ளது. அதனால்தான் இறுதி யுத்தம் வரையும் சில விடயங்களை அதனால் சாதிக்க முடிந்து. முஸ்லிம்ளை பொறுத்தவரை முஸ்லிம் தேசியம் என்பது முஸ்லிம் காங்கிரசின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டது அது உச்ச நிலைக்கு சென்றது, பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் மத்தியில் பிளவு ஏற்பட்டது பிரதேச அடிப்டையில் சிறு கட்சிகளாக உடைந்தது. இது முஸ்லிம் தேசியத்தின் வீழ்ச்சிக்கான ஒரு காரணமானது.
இன்று சிங்கள பெளத்த தேசியவாதம் கட்சிப்படுத்தப்பட்டு பிளவுகள் இன்றி ஒரு உறுதியான நிலையில் இருக்கிறது. தமிழ் தேசியமும் யுத்த தோல்விக்கு பின்னரும் அதன் ஒரு கூறு இலங்கைக்கு வெளியில் டயஸ்போரா என்று செயல்பட்டு வருகின்றது. இன்று தமிழ் தேசியம் பலவீனப்பட்டுள்ளது முஸ்லிம் தேசியம் பல கூறுகளாக பிரிந்து , முஸ்லிம் காங்கிரஸ் கூட அரசாங்கத்துடன் இணைந்துள்ளதால் மிக மோசமாக பலவீனப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் தேசியம் என்பது தோல்வி என்று கூறமாட்டேன் ஆனால் படு பாதகமான பின்னடைவை சந்தித்துள்ளது.
முஸ்லிம் தேசியத்தின் இந்த பாதகமான பின்னடைவுக்கு காரணம் என்ன ?
தமிழ் தேசியம் என்பது ஆரம்ப காலத்தில் இருந்து சுகபோகங்களை விட்டுகொடுத்து வந்த உணர்வை பார்க்கின்றோம் , ஆரம்ப காலத்தில் தமிழ் அரசு கட்சியை எடுத்துகொண்டால் பஸ்சில்தான் பாராளுமன்றம் செல்வார்கள் அவர்களின் -பாராளுமன்ற -அடையாளம் வேஷ்டி, சால்வை சந்தன பொட்டு என்று அதன் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பஸ்ஸில் ஏறி கம்பியில் பிடித்து நின்று கோல்பேஸ் முன்றலில் இறங்கி பாராளுமன்றதுக்கு நடந்து செல்வார்கள். இது ஆரம்ப காலம் தொடக்கம் இருந்தது. இன்று தமிழ் கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட முதலாளிகள் அல்லர்.
ஆனால் முஸ்லிம் தேசியத்தை எடுத்து கொண்டாள் முஸ்லிம் தேசியத்தின் உருவாக்கமே பகட்டானது. சவ்கரியங்களை அடிப்படையாக கொண்டது, பதவிகளை மோகித்தது, முஸ்லிம் தேசியம் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் தேசிய தலைவர்கள் முகத்தில் ஒரு கருப்பு கண்ணாடியுடன் இருக்க தங்களின் ஜீப்கள் பல தொடரணியாக போகவேண்டும். அந்த அனைத்து ஜீப்களுக்கும் கருப்பு கண்ணாடி இருக்கவேண்டும் அந்த வாகனங்கள் வேகமாகப் போய் நிறுத்தும் இடத்தில் நிற்கும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்களின் முகத்தில் புழுதியை அடிக்கவேண்டும், அப்பதான் அவர்கள் தலைவர்கள் அப்பதான் அது தேசியம்.
தமிழ் தேசியம் சவ்கரியங்களையும் , வசதிகளையும் விட்டுகொடுகின்ற தேசியமாக வளர்ச்சி அடைந்தது, பின்னர் ஆயுதங்களை எடுத்ததன் பின்னர் அது அதிகாரமாக மாறியது ஆனால் முஸ்லிம்களின் தேசியம் என்பது பகட்டானதாக இருந்தது ஒரு பெரிய வீடு வைத்திருக்கிற ,பணக்காரராக இருகின்ற பிச்சை காரராக இருந்தாலும் பணக்காரராக உருமாறிய நபர்களை அங்கீகரிகின்ற தன்மை முஸ்லிம் தேசியத்திடம் இருந்தது. அன்று வன்னியில் முதல் பாராளுமன்ற உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவானார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டர் அன்று இருந்த முஸ்லிம் சமூகத்தில் அந்தஸ்து அற்ற ஒருவர் அதேபோன்று மட்டகளப்பில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அன்று தெரிவானார். ஒரு சைக்கிளை கூட சொந்தமாக கொண்டிராதவர் பல கோடீஸ்வரர்கள் மத்தில் அவர் தெரிவானார். அதேபோன்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் எம்.எச்.எம் .அஸ்ரப் அவர் சாதாரண கிராம அதிகாரியின் மகன் காரியப்பர் குடுப்பதில் மிகவும் வருமையனவர் பல கோடீஸ்வரர்கள் மத்தியில் அவர் தெரிவானார்.
ஆனால் இந்த நிலை வேகமாக மாறியது. அன்று தெரிவானவர்களை ஐந்து ஆறு ஆண்டுகளில் பணக்காரர்களாக அடையாளம் காணவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. பணக்காரர் ஆக முடியாத அபூபக்கர் முஸ்லிம் சமூகத்தில் தோல்வி கண்டார். இந்த நிலையை முஸ்லிம் தேசியம் விரைவாக அடைந்துகொண்டது. இதுதான் தமிழ் தேசியத்துக்கும் முஸ்லிம் தேசியத்துக்கும் இடையிலான வித்தியாசம் இது வளர்சியா ? அல்லது வீழ்ச்சியா ? என்று தெரியவில்லை அனால் வரலாற்று ரீதியாக இது வீழ்ச்சிதான்.
தமிழ் அரசியல் தரப்புக்கும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையான முரண்பாடான விடையமாக பார்க்கப்படும் வடக்கு கிழக்கு இணைவதா ? பிரிவதா ? என்ற விடயம் இது தொடர்பாக என்ன தெரிவிக்கின்றீர்கள்?.
முஸ்லிம் காங்கிரசின் அரசியல் வழிகாட்டி எம்.எச்.எம்.அஸ்ரப் என்றவகையில் ஒரு சம்பவத்தை குறிபிடவேண்டும். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தன காலத்தில் அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த வேளையில் 1987 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பு விடையைம் நீதிமன்றம் வந்த வேளை கிழக்கு மாகாணத்தில் அட்டாளச்சேனையில் ஒரு கூட்டம் ஏற்பாடாகியது.
இது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரிப்புக்கான பிரகடன கூட்டம் என்று கூறலாம் அனால் எம்.எச்.எம்.அஸ்ரப் அந்த கூட்டத்தில் நுழைந்து கூடத்தில் தலைப்மை மாற்றிவிட்டார் அதை முஸ்லிம் அலகுக்கான பிரகடனக் கூட்டம் என்று மாற்றினார். வடக்கு , கிழக்கு இணைந்தால் பரவாஇல்லை ஆனால் அதில் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு என்பதுதான் பிரச்சினை என்றார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு சிங்களவர்களும் தமிழர்களும் இடையில் அதிகாரம் பிரிக்கப்படுவதல்ல மாறாக சிங்களவர்களும், தமிழர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் இடையில் அதிகாரம் பகிரப்படுவது என்பதாக அதை மாற்றினார்.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தனி அலகு இல்லையென்றால் தனித்த கிழக்கு மாகாணம் சிறந்தது என்றுதான் சொல்லும்.
தென்கிழக்கு அலகு தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேசிவருகின்றது அன்மையில் கல்முனையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி இது தொடர்பாக பேசியுள்ளார் , நீங்கள் அது தொடர்பில் பேசிவருகிறீர்கள் அதன் வடிவம் அதன் சாத்தியப்பாடு பற்றி கூறுங்கள்
தென்கிழக்கு அலகு என்பது ஒரு திசையை அடிப்படையாக கொண்ட ஒரு விடையம் இது பின்னர் ”அகண்ட தென்கிழக்கு அலகு” என்று மாற்றப்பட்டது. முக்கியமான விடையம் என்னவென்றால் இந்த கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையல்ல சந்திரிகா குமார துங்கா ஜனாதிபதியாக இருந்த போது அவர் முன்வைத்த முஸ்லிம்களுக்கான சிபாரிசு என்பதுதான் உண்மை . அந்த சிபாரிசை, அந்த முன்மொழிவை வழிமொழிய வேண்டிய நிற்பந்தம் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்தது அன்று முஸ்லிம் தேசியம் உச்சம் பெற்றிருந்தது. தென்கிழக்கு அலகு என்பதை சில மாற்ற திருத்தங்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்தது.
அம்பாறையை மையப்படுத்திய தென்கிழக்கு அலகு தொடர்பான அக்கூட்டத்தில் மட்டக்களப்பு, திருக்கோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட கிட்டத்தட்ட அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களும் ‘தென்கிழக்கு அலகு கோரிக்கை என்பது மட்டக்களப்பு, திருகோணமலை வன்னி ஆகிய மாவட்ட முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்து கைவிட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் கரையேற்றும் கோரிக்கை’ என்று கருத்துகளை முன்வைத்தனர் பின்னர் இது குறித்த பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக ‘அகண்ட தென்கிழக்கு அலகு’ என்ற பரிமாணத்தை பெற்றது. இன்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அகண்ட தென்கிழக்கு அலகு என்பது முக்கியமான விடயமாக இருக்கிறது.
அரபு முஸ்லிம் உலகின் இன்று ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சி -துருக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சி , மற்றும் துனூசியா தொடக்கம் லிபியா வரை எழுந்துள்ள எழுச்சி இலங்கையில் படித்த முஸ்லிம் மட்டங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் இலங்கையில் இஸ்லாமிய தலைமைத்துவம் ஒன்றின் வெற்றிடம் மேலும் வலுவாக உணரப்படுகின்றது. என்பதை சமூக வலைத்தளங்கள் மூலமும் அறிந்து கொள்ளமுடியும். இந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையில் இதை உள்வாங்கி மேலும் முஸ்லிம் காங்கிரசை இஸ்லாமிய பெறுமானங்களை நோக்கி நகர்த்த போகின்றது?
இலங்கை போன்ற சிறுபான்மை நாடுகளில் இஸ்லாமிய அரசியல் செய்வதாக இருந்தால் சிறுபான்மை நாட்டில் எப்படி இஸ்லாமிய அரசியல் செய்வது என்ற புதிய கற்றல் தேவைப்படுகின்றது. அதற்கான பெரிய வெற்றிடம் ஒன்று இருக்கிறது. இது தொடர்பாக நான் அட்டாளச்சேனையில் பேசும்போதும் கூறியுள்ளேன். உடனடியாக இஸ்லாமிய தஃவா இயக்கங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற புதிய சிந்தனை போக்கை முன்வைத்தேன்.
அப்போதுதான் தேசியவாதமா இல்லையா ? (குறித்த விடயம்) இஸ்லாம் ஏற்றுகொண்டதா இல்லையா ? இலங்கை முஸ்லிம்களின் அரசியல் , பொருளாதார மற்றும் பண்பாடு கலாச்சார அனைத்து பாதுகாப்பு விடயங்கள், பண்பாட்டு விழிமியங்கள், அனைத்தும் சேர்ந்த விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அல்லது எழுச்சி பெறவேண்டுமானால் பாமர மக்களையும் ,படித்தவர்களையும் இஸ்லாமிய கோட்பாட்டாளர்களையும் இணைக்கக் கூடிய புதிய வடிவம் ஒன்று அவசியம். இதைத்தான் நான் திரும்பவும் கூறுவேன்.
மற்றுமொரு விடையம் ஸ்ரீலங்கா முஸ்லிம் உறுபினர்களுக்கு இஸ்லாம் தெரியாது. அதன் தலைவர்கள் தொண்டர்களுக்கு இஸ்லாம் தெரியாது அதேபோன்று பல இயக்கத்தவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருகின்றார்கள் சுன்னது வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமிய ஆகிய வற்றின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருகின்றார்கள்.
இவர்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிக்கொண்டு மொத்தமாக (இஸ்லாமிய அரசியலை) கோட்பாட்டு ரீதியாக இவர்களுக்கு விளங்கப்படுத்தி கொடுப்பது என்பது பாரிய பணி மட்டுமல்ல கடினமான பணியும் கூட அதற்கு உரிய பாடத்திட்டம் வேண்டும் யார் இதை செய்வது ? என்பதுதான் பிரச்சினை ஆனால் செய்யப்படவேண்டும் என்பதில் வேறு கருத்துகள் இல்லை.
பிரதேசவாதம் எப்படி தேசிய முஸ்லிம் அரசியலை பாதிக்கின்றது ? அதை எவ்வாறு தடுப்பது ?
பிரதேசவாதம் தேசிய முஸ்லிம் அரசியலை மிகவும் பாதித்துள்ளது. பாதித்து வருகின்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேசிய அரசியலில் தோற்ற இடமும் அதுதான் . பிரதேசவாதம் மற்றும், ஊர்த்துவம் முஸ்லிம் தேசியத்தை அழிக்கும் நஞ்சு என்பதை அவர் கண்டார் எழுச்சி பெற்ற முஸ்லிம் அரசியலின் பெரும் தடைகள் அவை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் தோற்றுபோன இடம் பிரதேசவாதம் மற்றும் , ஊர்த்துவம். 1989 ஆம் ஆண்டு மட்டகளப்பு மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பார் அதை காத்தான்குடிக்கு இரண்டு வருடமும், ஓட்டுமாவடிக்கு இரண்டு வருடமும் ஏறாவூருக்கு இரண்டு வருடமும் என்று பிரிக்கப்பட்டும் என்று வாக்குறுதி வழங்கினார் இது அவர் ஊர்த்துவத்தை உணர்ந்தால்தான் அவ்வாறு கூரவேண்டி ஏற்பட்டது . அந்த தோல்விகள் இன்றும் தொடர்கின்றது.
கொழும்பில் உள்ளவர்கள் மட்டக்களப்பான் என்பது பிரதேசவாதம் , மட்டக்களப்பில் உள்ளவர்கள் ஏறாவூறான் , ஓட்டுமாவடியான் என்பது ஊர்த்துவம் இதை இல்லாதொழிக்க ஒரே மாற்றுவழி உச்சம்பெற்ற இஸ்லாமிய கோட்டுபாட்டு வழிமுறைகள்தான் உலகலாவியரீதியிலும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள்தான் முஸ்லிம்கள் அரபு தேசியவாதிகள் அல்லர் , முஸ்லிம்கள் எல்லைகளுக்குள் கட்டுப்பட முடியாது முஸ்லிம்களுக்கு தேசம், தேசியம் என்ற எல்லைகள் கிடையாது. ஆனால் இன்று அவரவர் எல்லைகளுக்குள் மகிழ்ச்சியடைகின்றார்கள் ஆங்கிலத்தில் பழமொழியொன்று உண்டு ”உங்களை ஊரில் இருந்து வெளியேற்றலாம் ஆனால் ஊரை உங்களிடம் இருந்து வெளியேற்ற முடியாது”- You can take the boy from the village but you can not take the village out of the boy.- என்று இது பல நூற்றாண்டு காலமாக இஸ்லாம் அல்லாத பிற மத , கலாச்சார முறைகளில் இருந்து வருகின்றது, இது உள்ளங்களில் உள்வாங்கப்பட்டுள்ளது, இதை வெளியில் துரத்துவது எப்படி ? இதை இஸ்லாமிய அரசியல், மற்றும் சமூக செயல் பாட்டினால்தான் துரத்த முடியும்.
வடக்கு, கிழக்கிற்கு வெளியில் முஸ்லிம்கள் அடிக்கடி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை சுட்டிகாட்டப்படுவதுடன் எதிர்காலத்தில் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது இது தொடர்பான உங்களின் பார்வை எப்படி ?
சிங்கள பெளத்த தேசியவாதம் , தமிழ் தேசியவாதத்தை அழித்துள்ளது இன்னுமொரு தேசியவாதம் மிச்சமிருக்கின்றது அதையும் அழிப்பதற்கான ஓத்திகையாகத்தான் தற்போது நடப்பவற்றை பார்க்கின்றோம். சிங்கள பெளத்த தேசியவாதம் மதத்தையும் மொழியையும் கொண்டு கட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மிகவும் உறுதியாக நிற்கின்றது , தமிழ் தேசியவாதம் மொழியை மட்டும் கொண்டு கட்சிப் படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் தேசியவாதம் மார்க்கத்தை மட்டும் கொண்டு கட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே சிங்கள பெளத்த தேசியவாதம் இஸ்லாமிய மார்க்க தொன்மங்கள் அடையாளங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது. நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்லர் ஆனால் முஸ்லிம்களின் வரலாற்று தொன்மங்களாக சியாரங்கள் காணப்படுகின்றது. இதனால் அவை தாக்கப்படுகின்றது மேலும் பல இலக்குகளை தாக்கவும் குறிவைத்துள்ளது என்று கருதுகின்றேன் , தமிழ் தேசியத்துக்கும் , முஸ்லிம் தேசியத்துக்கும் இடையிலான கடுமையான பிரச்சினைளின் போதும் முஸ்லிம் தொன்மங்கள் அழிக்கப்படவில்லை அனால் பெளத்த தேசியவாதம் இஸ்லாமிய அடையாளங்கள் மீதும் தொன்மங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றது. அதற்கு அரசின் ஆதரவை பெற்றும், பெறுவதற்கான வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றது.









