அமெரிக்க தீர்மானம் அமெரிக்க ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது: அரசாங்கம்
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கேட்கப்பட்ட போது இதனை தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக செய்தி வெளியுள்ளது இந்த தீர்மானத்தின்படி, மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடாபான தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு உட்பட்ட ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம் என்பனவும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று பாராளுமன்றத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2010- ம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்கவென 13 மில்லியன் டாலர்களை அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்த நாட்டு அரசிடம் கோரியுள்ளது. எனினும் நாடாளுமன்றத்தின் தீர்மானம் உடனடியாக அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







