Archive for September 27th, 2009
மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -11)

எஸ.எம்.எம் பஷீர்
ராஜிவ்காந்திக்கு கிட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து, 03 .அக்டோபர் 1988 ம் ஆண்டு, எழுதிய கடிதத்தில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். புலிகள் வழக்கமாகவே ஒப்பந்த மீறுதலை எதிர்தரப்பினரிடம் சுமத்தி, தங்களது நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலை சர்வதேசமயப்படுத்தி தமது ஆதரவு தளத்தினை தக்கவைப்பதற்குமான காரணங்களை முன்வைத்தே , இந்த ஆதரவு கோரிக்கையும் வழக்கம்போல் மறைமுகமாகவே வழங்கப்பட்டது. சமாதானப்படையினை, சண்டைப்படையாக்கிய பின்னர் எவ்வாறு தமது யுத்தநிறுத்த கடமையை தாங்கள் என்றுமே மீறவே இல்லை என காலத்துக்கு காலம் இலங்கை அரசுடன் தமது அழிவின் விளிம்புவரை செய்துவந்ததுபோல் புலிகள் தாங்கள் யுத்த நிறுத்தங்களுக்கு ஆதரவாக பின்னோக்கி கூறுகின்ற வகையில்தான், இவ்வாறு கிட்டுவினாலும் சூசகமாக இந்திய அரசிடம் கடிதத்தில் ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது. இக்கடிதத்தில் கிட்டு “தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம். பேச்சுவார்த்தைகளில் எமதுஇயக்கத்தில் பிரதிநிதிப்படுத்திய என்னை கைதுசெய்து, சிறையில் அடைத்ததின் மூலம், சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு தன்னிச்சையாக, 10 நாள் போர்நிறுத்தம் அறிவித்தமை மாத்திரம் இணக்கமான தீர்வு ஒன்று உருவாவதற்கு போதுமானதாகவும் இருக்கவில்லை. இதுவரையில் என்னுடன் சிறையில் இருக்கும் சக தோழர்களையும், விடுதலை செய்ய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு; எமது தலைவர் வே.பிரபாகரன் அறிவித்திருந்தார் .
இது தொடர்பாக, எவ்வித நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படாமலேயே போர்நிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.. நாம் சமாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நிரந்தர சமாதானம் ஒன்றையே நாம் வேண்டி நிற்கிறோம். சமாதான தூதுவனாக, அழைத்து செல்லப்பட்ட எமது தோழர் ஜொனி அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார். சமாதான தீர்வொன்றை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த, நானும், எனது தோழர்களும், காரணம் எதுவுமின்றி கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். எம்மீது ஆதாரமற்ற பொய்யான , கற்பனையான, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடுகையில் நாம் ஒருபோதும் இங்குள்ள எமது அலுவலகத்தை மூடி விடும்படியோ, அல்லது இங்கு இருந்து வெளி ஏறும்படி , கேட்கப்படவில்லை. மேலும், 1987 ம் ஆண்டு, அக்டோபரில் இந்திய இராணுவத்துடனான தூரதிர்ஷ்ட வசமான மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து நாம் வெளியேற முடியாதவாறு, வீடுகளை சுற்றி பொலிஸ்காவல் போடப்பட்டு இருந்தது.” மேலும் குறிப்பிடுகையில், தமது விடுதலைக்காக, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதை அறிவித்து; இரண்டு கோரிக்கைகளை இந்திய அரசுக்கு, விட்டிருந்தார்.
1 இந்திய மண்ணில் நாம் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அக்குற்றம் என்ன என்பதை வெளிப்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவேண்டும்..
2 அவ்வாறு வழக்கு தொடர முடியாதாயின் , எம்மை விடுதலைசெய்து தமிழீழத்தின் எமது போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்., என கோரியிருந்தார்.
அந்நிகழ்வு குறித்து “தினமணி” பத்திரிக்கை, இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு, தேர்தல் நடத்திவிடலாம் என்று, ராஜிவ்காந்தி கூறுகிறார். இலங்கையின் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில், போட்டியிட வேட்புமனுத்தாக்கல், திங்கள் அன்று துவங்கியது.. ஆனால், ஈழ புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாவட்டங்களில் , ஆறு மாவட்ட அதிகாரிகள், தேர்தல் பணியில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அப்பத்திரிகையானது இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் சமீபத்திய பத்துநாள் போர்நிறுத்தம் வரை, இந்தியஅரசு தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், வெற்றிபெறாமல் போனதற்குரிய காரணம், எதிராளியின் செயலை சரிவர கணிக்க தவறியதாகும்., இந்திய அரசு அறிவிக்கும் சலுகைகள் எல்லாம், , ஈழப்புலிகளை சிறுமைபடுத்துவதாக இருக்கின்றது.” மேலும், இப்பத்திரிகை “காலவரையறையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்து, கிட்டு முதலான விடுதலைப்புலிகளை விடுவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.” இதில் முக்கியஅம்சம் என்னவென்றால், “தினமணி” த.வி. கூ முன்வைத்துள்ள திட்டத்தை இந்திய அரசு பரிசீலிப்பது உதவியாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருந்தது.
தமிழகத்தில் பல்வேறுபட்ட தொப்புழ்கொடி ஆதரவினைதிரட்டும், நடவடிக்கைகளுக்கும் தமிழீழ ஆதரவாளர்களால் முடுக்கி விடப்பட்டன.. ஆனால், இந்த பின்னணியில் கட்டுரையாளர், புலிஅல்லது இந்திய இலங்கை ஒப்பந்த தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வரலாற்றுரீதியாக, விரிவாக இதை ஆய்வுசெய்கின்ற, நோக்கத்திற்காக, எழுதவில்லை. மாறாக, அன்றைய கால கட்டத்தில் இங்கு நடைபெற்ற சம்பவங்களில் சிலவிடயங்கள் தவிர்க்க முடியாமல், சொல்லப்படவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருப்பது என்பதினாலேயாகும். 1985 இல் ஒரு பின்னோக்கிய நிகழ்வாக கிட்டுவினுடைய செயல்பாடு ஒன்று பார்க்கப்பட வேண்டியுள்ளது. சுதுமலையில் இலங்கைராணுவம் புலிகளுடைய ஆயுதகிடங்கை அழிப்பதற்கு முற்பட்டவேளையில், டெலோ உறுப்பினர்கள் ராணுவத்தோடு போரிட்டு அவைகளை பாதுகாத்து கொடுத்ததாகவும், அவ்வாறு புலிகளின்உயிர்களையும், ஆயுதங்களையும், பாதுகாத்ததாகவும், அவ்வாறு பாதுகாத்ததிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், கிட்டு, “எங்கள் உயிரை காக்க தோளோடு தோள் நின்ற டெலோவை வாழ்நாளில் மறக்கமாட்டோம்” என்று பத்திரிக்கை அறிக்கையில் பல நாட்கள் குறிப்பிட்டதாகவும், யாழ்ப்பாண செய்திஒன்று கூறுகின்றது. இவ்வாறான கிட்டுத்தான் பின் ஈவு, இரக்கமின்றி, டெலோ உறுப்பினர்களையும், அதன் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தையும், சுட்டுக்கொன்றவராகும். கிட்டுவின் நன்றி தெரிவித்தல் டெலோவை அழிப்பதாகவே அமைந்தது.
முக்கியமாக, 1988 ஜனவரியில், பிரபாகரன் இந்திய இலங்கை உடன்பாடுகுறித்து; இந்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள், இந்த நிலைப்பாட்டினுடைய ஆரம்பகாலம் 1987 அக்டோபர் தொடக்கி, ஒருவருடத்தின் பின்னர் ஏற்பட்ட பல்வேறுபட்ட புலிகளுக்கும், இந்தியப்படைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை, கோடிட்டுகாட்டுகின்ற, பலஅம்சங்களை கொண்டிருந்தது. ஜனவரி 13 இல் இந்திய அரசுக்கு பிரபாகரன் விடுத்த மனுவில் எல்லாவித ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, சமாதான பேச்சு வார்த்தையை தொடருமாறு கோரியிருந்தார்.
அம்மனுவில் தாங்கள் ஏற்றுக்கொண்டதுபோல் இடைக்கால நிர்வாக சபை (Interim Adminsitrative Council) தமது பெரும்பான்மை உறுபினர்களை கொண்டு நிறுவப்பட்டால் தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக கூறியிருந்தார். மேலும் எதிர்கால பேச்சு வார்ததைகளில் தாமே முக்கிய பாத்திரத்தினை வகிக்க வேண்டுமென்றும், ஏனைய தமிழ் குழுக்களின் கட்சிகளின் பிரதிநித்துவத்தினை புறம்தள்ளும் , ஏகபோக உரிமையினை வலியுறுத்தும் கோரிக்கைனை வெளிப்படையகவே முன்வைத்திருந்தார்.ஆனால் மறுபுறம் இந்திய அரசும் புலிகளும் பேசவேன்றுமேன்றும்;அமைக்கப்படும் இடைக்கால நிர்வாக சபையில் எல்லா தமிழ் குழுக்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும் த.வி கூ. தலைவர் . அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எட்டப்பட்ட .( 28.09.1987) ஒப்பந்தத்திற்கு ஒருபடி மேலே சென்று தமது கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு இடங்களை விட ஏனைய தமிழ் குழுக்களை உள்வாங்கியதாக இடைக்கால நிர்வாக சபையில் சபை அமையவேண்டும் என்பதாகும்.
(தொடரும்)
மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம்-பாகம் 10

எஸ்.எம்.எம் பஷீர்
- முப்பத்தி ஒன்பது-39 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை
- மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் படுகொலை
- மூதூர் MP A.L.அப்துல் மஜீத் படுகொலை
1998 ஏப்ரல் மாதத்தில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழுவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை . அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 இன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 டிசம்பர் 1987ல் காத்தான்குடியிலும் முறையே ஒன்பது-9 பேர் மற்றும் முப்பது-30 பேருமாக முப்பத்தி ஒன்பது-39 இளைஞர்கள் ஊர்காவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள் செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் நான்கு அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 இம் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மட் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியான நிர்வாகத்தின் கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் MP A.L.அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தாக்குதலின் பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட்(PLOT) ரொலோ (TELO) , ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம், மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.
கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட் THE ISLAND பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தினை முஸ்லிம் மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வடகிழக்கு இணைந்த இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் IPKF னாலும் EPRLF னாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள்மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள) எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினரை முஸ்லிம் காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
IPKF வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கரையாக இருந்தனர். 13 ஆம் திகதி ஜனவரி 1988 இல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது. 1037 IPKF படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் IPKF தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்தார் 1988 ஏப்ரல் மாதம் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 இன் பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.
தொடரும்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் சிறுவர் உரிமை. சிறுவர் பாதுகாப்பு கூட்டம்

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில்:
சிறுவர் உரிமை. சிறுவர் பாதுகாப்பு, மேம்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம் பெற்றது.கல்விக்கும் சமாதானத்திற்குமான அமைப்பான ஒபெட் இந்த கூட்டத்தை எற்பாடு செய்திருந்தது. பேராதனை பல்கலைக்கழக மெய்யில் துறை தலைவரும். சிரேஷ்ட விரிவுரையாளமான கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்,காசிமிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லா, இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.முனீர் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர்.எம்.நதீர்,கிராம அதிகாரி என்.எம்.ரஸ்மி,சமுர்த்தி அபிவிருத்திஅதிகாரி எம்.எஸ்.எம்.முனீர், ஊடகவியலாளர் ஹிஷாம் சுசைன், ,பலரும் இந்த கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். ஓபெட் அமைப்பின் தலைவர் எம்.நபீல் இக்கூட்டதின் முக்கியத்துவம்; குறித்து விளக்கமளித்தார். ஆரம்ப இடைநிலை மாணவர்கள் குறித்த கூடிய கவனத்தை செலுத்த வேண்டியநிலை உள்ளதாகவும், புத்தளம் நகரத்தை மையப்படுத்தி முதற்கட்டமாக இப்படிப்பட்ட மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். அடுத்தகட்ட நகர்வாக புத்தளம் தொகுதினையும், பின்னர் மாவட்ட மட்டத்திலான செயற்பாடகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

“புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” இழப்பு -2
சமூகம் என்ற வகையில் ஒரு முஸ்லிம் சமூகம் தனது ஈட்டல்களையும் இழப்புகளையும் கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என்பதால் இந்த இழப்பையும் எமது இணைய தளம் பதிவேற்றி கணக்கில் வைத்துகொள்கிறது- www.lankamuslim.org
“புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்“
எஸ்.எம்.எம்.பஷீர்
“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.” (விளம்பி நாகனார்)
எனது “புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு:- ….
மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர்
முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன்ஓடை ஆரையம்பதி மட்டக்களப்பு.
வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.
மதம் இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம். அதனால் இலங்கைவாழ் இனங்களுக்கிடையில் இஸ்லாமியத் தமிழர்களே அவர்களின் தாய்மொழி அரபு மொழியாக இருந்தாலும் பேச்சு மொழியாக தமிழையே கொண்டவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடையவேண்டும் எனக் குரல் எழுப்பியவர்களில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்களும் அடங்குவர் இருந்தபோதிலும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கைச் சுதந்திரத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மேலும் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் சிங்களவர்களுக்கும் அடிமையாக வாழவேண்டி ஏற்பட்டது.
உலக நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்கள் உரிமைக்காகவும் மொழிக்காகவும் போராடினார்கள். வென்றார்கள் இது வரலாறு சொல்லும் பாடங்கள் ஆனால் இலங்கையில் குறிப்பாக தமிழீழத்தில் வாழ்ந்த இஸ்லாமியர் “விடுதலை உணர்வோடு விடுதலைப் புலிகளில் இணைந்து போராடி மாண்டனர்” என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.
அடி, உதை பட்டு எத்தனை காலம் எவன்தான் வாழுவான் ஆக மானமே பெரிதெனக் கொண்டவன் அடிமையாக வாழ விரும்பமாட்டான் அதற்கு இந்த முகம்மதி அலியார் முகம்மது சலீம் மட்டும் சளைத்தவனாக இருக்கமாட்டான்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியப்படைகளும் இனத்துரோகிகளும் செயற்படுகின்றார்கள். ஒரு லெட்சம் இந்தியத் துருப்புகள் தமிழீழ மண்ணில் வந்து இறங்கிவிட்டது. வீதிக்கு வீதி தெருவுக்குத் தெருவாகவும் படையினர் வருகின்றார்கள். சந்தேகம் கொண்டவர் யாராக இருந்தாலும் இந்தியச் சிப்பாயின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவான். விடுதலைப் புலிவீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.
அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவுவேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலிவீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது.
1988ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதி தமிழர் வாழ்ந்த பகுதி, இடையிடையே முஸ்லிம் குடும்பங்களும் தமிழர்களுடன் ஒட்டி உறவாடி வாழத் தொடங்கினார்கள். அந்த வேலையில்தான் மேஜர் வள்ளுவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், வளர்ச்சி மக்களின் பங்களிப்பு இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பு சம்மந்தமான கருத்துகளை இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களில் விதைத்தார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி மறக்கமுடியாத கிராமம், தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் துருவலும்போல் வாழ்கின்றார்கள். கைத் தொழிலுக்கே முதன்மையான இடம். கல்வியிலும் சழைத்தவர்கள் அல்லர்,வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளைத் தொழுகை முடிந்ததும் அந்தக் காத்தான்குடி ஆரையம்பதிப் பிரதான பாதையில் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளோடு பெரியோர்கள் சிறியோர்களும் நின்று கூடிக் கதைத்துப் பேசி அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இடையிடையே மனக் கசப்புக்கள் வந்து இரு இனங்களுக்கிடையிலான கலவரங்களாக. மாறிவிடுவதும் உண்டு. சூறாவழியடித்து ஓய்ந்ததுபோல் மீண்டும் அன்பைப் பரிமாறுதல் தொடரும்.
இப்படியான பாசப் பிணைப்புகளின் வலையில் பின்னப்பட்டுக் கிடக்கும் வேளையில்தான். மேஜர்வள்ளுவனின் கருத்தில் இணைந்து விடுதலைப்புலிகளின், அவர்களுக்கான செயற்திட்டங்களில் இந்த முகம்மது சலீம் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
எப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான். புலிகளின் செயற்திட்டங்களையும் மறைமுகமாகக் செய்துவந்தான். இரகசியங்களைக் கையாழுதல் அக்கால வேளைகளில் இந்தியப்படையினதும் இனத்துரோகிகளினதும் நடமாட்டங்களை வேவுப்பணிமூலம் ஊருக்குள் நின்று கண்காணித்து செயற்படுத்துபவன்.
அதுமட்டுமின்றி இவனால் பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் பாசறையில் புகுந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தவன். இரவுவேளைகளில் துப்பாக்கியைத் தோளில் சுமந்துகொண்டு இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டவன். அன்று அவை சிறுசிறு தாக்குதல்களாக இருந்தாலும் அது பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததென்றே சொல்லலாம்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தியப்படைகள் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய வேளைகளில் புலிகள் அமைப்பில் இனைந்திருந்து பல முஸ்லிம் புலிவீரர்கள் தாங்களாகவே ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால் இந்த சலீம் மட்டும் புலிகள் இயக்கத்தைவிட்டோ, புலி உறுப்பினர்களைவிட்டோ விலகிச் செல்லாதிருந்தது களமாடுவதற்காகவன்றோ.
புலிகளுக்கும் அரசபடைகளுக்குமிடையில் போர் மூண்டது. தமிழீழ மண்ணில் குண்டு வீச்சு விமானங்களாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் எறிகணை வீச்சுகளினாலும் தாக்கித் தகர்த்தான் தமிழீழ மண் ரணகளமாக மாறியது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. அடுத்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்மீது 10.06.1990 அன்று புலிவீரர்கள் மனோ மாஸ்ரரின் தலைமையில் தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். சங்கரின் திட்டப்படி இந்த வீரவேங்கை கபூரும் தாக்குதலை மேற்கொள்ளுகின்றான். சென்றல்கேம்ப் பொலிஸ்நிலையத்திலிருந்து சிங்கள இராணுவத்தினர். வீசும் ஆட்லறி எறிகணைகள் பதுங்கிக்கிடந்து தாக்குதலைத் தொடுக்கும் புலிகள் பக்கம் வீழ்ந்து வெடிக்கின்றது. கப்டன் சங்கரின் அணியில் நின்று இந்த கபூர் மிக வேகமாகச் செயற்படுகின்றான்.
11.06.1990 அன்று களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்டைமீது மிக வேகமான தாக்குதல்கள் புலிவீரர்களினால் தொடுக்கப்படுகின்றது. நேரத்திற்கு உணவு கிடைத்தாலும் உறக்கமின்றி எதிரியை விரட்டத் தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.
அளவான உடலோடு பின்னால் வாரி விடப்பட்ட தலைமுடிக்கு அழகைக் கொடுக்கும் அந்த வட்டமுகம் சிவந்த மேனி கூரிய விழி கொண்ட வேங்கையாக கபூர் தாக்கினான் தாக்கிக் கொண்டே சென்றான் முகாமினுள் இருந்த பகைவனுக்கு மிக அருகில் நின்று தாக்கினான். அது அவனுக்கு மிக இலகுவாக இருந்தது.
இருந்தபோதிலும் அன்று அனைத்தும் மிக வேகமாக செயற்பட்டு முன்னேறி இவன் தாக்குதலைத் தொடுத்தான். அந்தவேளை தம்பலவத்தையைச் சேர்ந்த சபேசன், கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நவயுகன, கொத்தியாபுலையைச் சேர்ந்த கீறோ, கோயில் போரதீவைச் சேர்ந்த வசந்தராஜ், மகிழவட்டுவானைச் சேர்ந்த விமலநாதன் ஆகியோர்களுடன் இந்த கபூரும் வீரச்சாவைத் தழுவிக் கொள்ளுகின்றான்.
(மீண்டும் பொழிப்புரை அவசியமில்லை இலத்தீன் மொழியில் Res ipsa loquitur என்று “அதுவேஅதற்கு பேசும்” (the thing speak for itself) என்று சொல்லுவத்போல இதனையும் உங்களின் வாசிப்புக்கு விட்டு விடுவிடுகிறேன் . இனிமேலும் இன்னொரு தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞ்ர்கள் இனமுரன்பாட்டுக்காக அழிவதை நிறுத்துவோம்)









