Lankamuslim.org

One World One Ummah

Archive for August 20th, 2009

ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் பொதுக்கட்டமைப்பு

leave a comment »

இந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக்கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப்பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச்செயலர் அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத்தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந்நாட்டில் பல ஆண்டுகால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும். இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

August 20, 2009 at 8:56 pm

துஸ்பியோகம் ஒன்றை விசாரணை செய்யச் சென்ற பொலிஸார் பாலியல்துஸ்பிரயோகம்.

leave a comment »

11 வயது சிறுமி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் ஒன்று தொடர்பான விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பொல்பிட்டிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்வத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்படி பிரதேசத்தில் உள்ள சிறுமி ஒருவர் 53 வயதுடைய நபர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக இம்மாதம் 10ம் திகதி பொல்பிட்டிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 12ம் திகதி இரு பொலிஸ் அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பெற்றோரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களது வாய்முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது 11 வயது சிறுமியை விசாரணைசெய்த அடுத்த பொலிஸ்காரர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆட்கள் இல்லாத குறிப்பிட்ட வீட்டை காட்டுமாறு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற பொலிஸ் காரரும் சிறுமியும் குறிப்பிடத்தக்களவு நேரமாகியும் திருப்பி வராததையடுத்து அங்கு விரைந்த பெற்றோர் பொலிஸ்காரர் தமது 11 மகளை கட்டியணைத்து சில்மிசம் புரிவதை கண்டுள்ளனர். சம்பவத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் இரு பொலிஸாரையும் தாறுமாறாக பேசிக்கலைத்துள்ளனர்.

மறுநாள் பொலிஸாரின் இச்செயல் தொடர்பாக மஹவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹப்புஅராச்சியிடம் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த பொலிஸாகாரர் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

இந்த தகவல் இணயதளம் ஒன்றில் தகவலாகும்


Written by lankamuslim

August 20, 2009 at 8:50 pm

அம்பாறையில் தமிழ், முஸ்லிம் விவசாயிகளின் காணிகள் அபகரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

leave a comment »

நௌஷாத் எம்.பி.

எமது நாட்டில் இன்று யுத்தம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் அப்பாவி விவசாயிகளின் பரம்பரை விவசாயக் காணிகள் எவ்வித வரலாறும் தெரியாத தீய சக்திகளின் தூண்டுதல்களினால் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டு வருவதை உடனடியாகத் தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌஷாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் நல்லெண்ண முயற்சிகளுக்கு எதிரான சில தீய சக்திகள் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, காரைதீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை அவர்களிடமிருந்து அபகரிப்பதற்கான நேரடி முயற்சியில் இறங்கியுள்ளனர். இது இம் மாவட்டத்தில் காணப்படும் அமைதி, சமாதானம் என்பவற்றின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான நிலை தொடருமானால் இனங்களுக்கிடையிலான பகைமை உணர்வு அதிகரித்துச் செல்லுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, இப்பிரச்சினையில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன், இப்பிரதேசத்தில் 10 வருடங்களுக்கு மேல் சாதாரண காணி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் எதுவித நிபந்தனைகளுமின்றி உறுதி வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினக்குரல்

Written by lankamuslim

August 20, 2009 at 3:42 pm

மட்டக்களப்பு கல்விக் கல்லூரி “ஹிஜாப் தடை” நாசவேலை தொடர்கிறது

leave a comment »

இனவாதம் அதன் உச்சகட்டத்தில் தாண்டவமாடும் போது:

மட்டக்களப்பு  கல்விக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹஜாப் அணிவதற்கு எதிரான நிருவாகத்தின் அணுகுமுறை  தூய இனவாதமாகும் . பல தடவைகள் முஸ்லிம் மாணவர்களினாலும்  மட்டகளப்பு அனைத்துப் பள்ளிவாயல்களின் சம்மேளனதினாலும் கோரிக்கைகள்  விடப்பட்டது இது பற்றி முஸ்லிம்  மாணவர்கள் குறிப்பிடும்போது முஸ்லிம் பெண் மாணவியருக்கு ஹிஜாபை அணிய அனுமதிக்குமாறு  கோரி 25கும் அதிகமான கடிதங்களை அதிபருக்கு அனுப்பியதாகவும் அதன் பிரதிகளை முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும்  அனுப்பியதாகவும் ஆனால்  எந்த பயனும் கிடைக்கவில்லை எனக்கூறினர் இது முற்று முழுதான முஸ்லிம்களின் மறுக்கமுடியாத  அடிப்படை உரிமையில் கைவைக்கும் விடயமாகும் என்பதுடன் இன மத முரண்பாடுகளை வளர்க்கும் நாசவேலையாகும்.

பகிடிவதையில் ஈடுபடும் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் யுவதிகளின் ஹிஜாபை கழற்றுமாறு வேண்டுவது  தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கு விடப்படும் சவாலாகும். கல்லூரியின் அதிபர் உட்பட நிருவாகத்தினர் உள்ளிட்டு கிழக்கு மாகாண சபை தமிழ் அரசியல் உறுப்பினர் அனைவரும் இவ்விடயத்தில் நெகிழ்ச்சியற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இதேவேளை, பிரதேச முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு கல்லூரியின் முஸ்லிம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் எதுவும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.முஸ்லிம்களை வருத்தும் விடயம் என்னவென்றால் இப்போதும் முஸ்லிம் மாணவிகள் தமிழ் மாணவிகளை ஒத்த உடைகளை அணிய மட்டும்தான் அனுமதிக்க படுகின்றனர்

தமிழ் இனவாதம் அதன் உச்சகட்டத்தில் தாண்டவமாடும் போது முஸ்லிம் தலைவர்கள் நீண்ட மௌனம் காப்பது பெரும் ஆத்திரமூட்டும் செயலாகும்  இதை உடன் முஸ்லிம் அரசியல் வாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Written by lankamuslim

August 20, 2009 at 1:21 pm

புத்தளம் இலவன்குளதில் மரிக்கார் சலீம் என்ற புலி கைது

leave a comment »

புத்தளம் இலவன்குளம் பகுதியில்  சுமார் 10 வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்த  நபரான மரிக்கார்  சலீம் வயது 43 என்பவர்  புத்தளம் பிரதேசத்தில் உள்ள கரைத்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்  இவர் வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளோடு இருந்து பின்னர் சரணடைந்து மெனிக்கம்  நிவாரண முகாமில் இருந்து தப்பி காட்டுவழியாக கரைத்தீவு பகுதிக்கு வந்துள்ளார்.

Written by lankamuslim

August 20, 2009 at 10:28 am

புத்தளம் பகுதியில் காற்றாடி மின் நிலையம்

leave a comment »

WindTurbines

புத்தளம் பகுதியில் காற்றாடிகளின் மூலமான மின் உற்பத்தி நிலையங்களைஅமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென 68 மில்லியன் அமெரிக்க டொலரை முதலிட நான்கு கம்பனிகளுக்கு இலங்கை முதலீட்டு சபை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.

சீவிகுவன்தீவு வின் பவர் கம்பனி மற்றும் விடத்தல் முனை வின் பவர் கம்பனி ஆகிய இரு கம்பனிகளுடன் 37 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தொடர்பில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக முதலீடுட்டுச் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த இரு மின் உற்பத்தி நிலையங்களும் 20 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்கும். இந்த மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டால் இலங்கையில் முதலாவது காற்றாடி மின் உற்பத்தி நிலையமாகவிருக்கும்.

Written by lankamuslim

August 20, 2009 at 9:34 am

தென்னிலங்கை முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்

leave a comment »

தென்னிலங்கை முஸ்லிம்களின் கல்விநிலையை மேம்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என்று முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமின் தெரிவித்துள்ளார்.வெலிகமவிலுள்ள தென்மாகாண இஸ்லாமியச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தென்மாகாண முஸ்லிம்களின்கல்வி நிலைபற்றிய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் தென்னிலங்கை முஸ்லிம் செயலகமும் இணைந்து நடத்திய இந்தக் கல்விக்கருத்தரங்கிற்கு சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமின் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

75 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் தென்மாகாணத்தில் முஸ்லிம்களின் கல்விநிலையை நோக்கும் போது கவலையளிக்கின்றது. அந்த அளவுக்கு எமது பிள்ளைகளின் கல்வி சீர்குலைந்துள்ளது.

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையில் முஸ்லிம் பாடசாலைகளை எடுத்துப் பார்ப்போமானால் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இரண்டு வீதமாவது இல்லை.

கொழும்பைப் பொறுத்தவரை வறிய முஸ்லிம் பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடு செல்ல குடும்பத்தலைவர்கள் கூலித் தொழிலாளியாக மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளாகப் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் தமது பிள்ளைகள் உயர் கல்வி கற்க வசதியின்றி கண்ணீர் சிந்துகின்றனர். இடை நடுவில் கல்வியைக் கைவிட்ட பிள்ளைகள் நாளடைவில் தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

எமது சமூகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதனையிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் சிந்திக்கிறது.

தென்மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒருவாய்ப்பாகக் கொண்டு முஸ்லிம்களின் கல்வித் தேவைகளை கல்வி அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்குச் சமர்ப்பித்து எமது தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

August 20, 2009 at 9:28 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers