Lankamuslim.org

One World One Ummah

தொழுகை நடத்த சீனா தடை

சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில் முஸ்லிம்களான உயிகுர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1960 வரை சீனாவிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்த இந்தப் பகுதி அதன் பின்னர் சீனாவின் வசம் சென்றது.

எண்ணெய் வளம் நிறைந்த இந்தப் பகுதியில் தொழிற்சாலைகளை அமைப்பதாவும், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறி சீன அரசு, ஹான் இன மக்களை அப்பகுதியில் குடியமர்த்த ஆரம்பித்தது.

50 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த ஹான் மக்கள் தொகை தற்போது 50 சதவீதமாகிவிட்டது. இதையடுத்து உயிகுர் மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அவர்களின் மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிகுர், ஹான் இனத்தவர்களுக்கு இடையில் கடந்த 5ஆம் திகதி நடந்த கலவரத்தில் சுமார் 156 பேர் பலியானதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த உயிரிழப்பு 800க்கும் மேலிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இதுவரை 1,134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சீனா அப்பகுதியில் இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது.

இந்நிலையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நேற்று நடந்தது. அப்போது உரும்கி கலவரம் குறித்துப் பேசப்பட்டது. கட்சியின் தலைவரும், சீன பிரதமருமான ஹூ ஜின்டோவும் இதில் கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில், “உரும்கி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைப் பிரிக்க நினைப்பவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள். ஜிங்ஜியாங் நகரில் முழு அமைதி கொண்டு வரப்படும்” உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கின் கேங் கூறுகையில்,

“இந்தக் கலவரத்தில் ஈராக் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் சீன அரசிடம் உள்ளது” என்கிறார்.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து சீன அரசு ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழுகை மேற்கொள்ளத் தடைவிதித்துள்ளது. அனைத்து மசூதிகளின் வாசலில், ‘வீட்டில் தொழுகை செய்து கொள்ளுங்கள்’ என்ற வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், மசூதிகளை மூடிவிட்டு அதைச் சுற்றிலும் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்ட இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. ஜிங்ஜியாங் மாகாணத்தில் வெளிநாட்டினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருப்பவர்களையும் உடனே நகரை விட்டு வெளியேறுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

About these ads

Written by lankamuslim

July 10, 2009 at 6:19 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,801 other followers

%d bloggers like this: