Lankamuslim.org

One World One Ummah

Archive for July 2nd, 2009

ஏறாவூரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மிச் நகரில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் வீட்டு முற்றத்தில் வைத்து, ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அகமது லெப்பை அகமது ரமீஸ் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாதாரண தொழிலாளியான இவர் வீட்டு முற்றத்தில் உறக்கத்திலிருந்த வேளை அங்கு வந்த ஆயுததாரிகள் இவரது தலையில் சுட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 9 எம்.எம் ரக கைத் துப்பாக்கியே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் பொலிஸார், கொலையாளிகளோ கொலைக்கான பின்னணியோ தமது ஆரம்ப விசாரணைகளின் போது கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

Written by lankamuslim

July 2, 2009 at 3:43 pm

முஸ்லிம்களை பற்றி “லங்காதீப” சிங்கள பத்திரிகை பொய்யான பிரசாரம்- ஊர்காவல் படையை முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களnக காட்டும் பயங்கரம்.

leave a comment »

முஸ்லிம்களை பற்றி  “லங்காதீப” சிங்கள பத்திரிகை  பொய்யான பிரசாரம்- ஊர்காவல் படையை முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களnக  காட்டும் பயங்கரம்   தமிழில் “தினக்குரல்”   பத்திரிகை  30 – June – 2009  அன்று   பிரசுரம்.

கிழக்கில் 18 முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் இயங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்
கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்த நிலையிலும் கிழக்கு மாகாண சபைப் பிரதேசங்களில் குறிப்பாக மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளிலும் ஆயுத வன்முறைச் சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதனால் கிழக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு கிழக்குப் பிரதேசங்களில் வழமை நிலைமை ஏற்பட்டு மக்கள் சுமுக வாழ்வை ஆரம்பித்துவிட்ட சூழ்நிலையிலும் ஆங்காங்கே அடிக்கடி ஆயுதத்தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் காடுகளுக்குள்ளும் மற்றும் மறைவிடங்களிலும் ஒளிந்திருந்து, சில புலிகள் இயக்கக் குழுவினரே எனக் கூறப்பட்டாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஆயுதம் தரித்த சில தமிழ்க் குழுவினரும் முஸ்லிம் குழுவினரும் ஈடுபட்டிருப்பதாகப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் தரப்பு விசாரணைகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலும் தெரியவந்தது.

இந்த வகையில் அண்மையில் பத்திரிகைக்கு கிழக்குப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தகவல் தருகையில், கிழக்குப் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் உட்பட்ட பிரதேசங்களில் ஆயுதம் தரித்த முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் பல இயங்கி வருவதாகவும் இவ்வாறு 18 முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் இயங்குவது பற்றி இதுவரை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த 18 தீவிரவாதக் குழுக்களும் பெரும்பாலும் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடிப் பிரதேசங்களைக் கேந்திர நிலையங்களாகக் கொண்டே அப்பகுதிகளில் இரகசியமாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளில் குறிப்பிட்ட முக்கிய அமைப்புகளில் ஆயுதங்கள் தாராளமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் இவர்கள் ரி.56 ரகத் துப்பாக்கிகள், ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள், பிஸ்டல்கள், எஸ்.எல்.ஆர்.துப்பாக்கிகள் 3.03 வகைத் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் ஆயுதத் தாக்குதல்களுக்கு வேண்டிய அனைத்து ஆயுதங்களையும் வைத்திருப்பதாகப் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மேலும் மேற்படி சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார். இதுவரை பெறப்பட்டிருக்கும் நம்பகரமான தகவல்களுக்கேற்ப இந்த முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளிடம் 400 க்கும் மேற்பட்ட ரி.56 ரகத் துப்பாக்கிகளும் ஏ.கே.47 வகையில் சுமார் 50 துப்பாக்கிகளும் எஸ்.எல்.ஆர். ஆயுத வகையில் சுமார் 30 துப்பாக்கிகளும் 3.03 வகையில் சுமார் 30 துப்பாக்கிகளுமாக 500 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இருப்பதாக கிழக்கு பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவற்றைவிட 300 க்கு மேற்பட்ட கைக் குண்டுகளும் 50 க்கு மேற்பட்ட கைத்துப்பாக்கிகளும் மேற்படி குறித்த முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளிடம் இருப்பதாகவும் இதுவரை கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஆயுதத் தாக்குதல் சம்பவங்களில் மேற்படி முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் மேலும் கிழக்கு பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கிழக்குப் பிரதேசங்களில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்பினருக்கு இவ்வாறு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னர் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா விலகியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கருணா குழுவினர் அவர்களின் குறிப்பிட்ட முகாம்களைக் கைவிட்டு சென்றனர் எனவும் இவ்வாறு கைவிடப்பட்ட முகாம்களிலிருந்தே குறிப்பிட்ட முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர் ஆயுதங்களை எடுத்துள்ளனர். இவ்வாறு கிழக்கில் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள முகாம்களிலிருந்தும் கருணா குழுவினர் தப்பிச்சென்றவேளையில், அந்தப் பகுதிகளில் செயற்பட்ட முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர் ஆயுதங்களைப் பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளனர் எனவும் இந்தவகையில் கிழக்கில் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசங்களை முக்கிய கேந்திரங்களாகக் கொண்டு செயற்படும் மேற்படி சுமார் 18 முஸ்லிம் தீவிரவாத அமைப்பினரிடமும் தாக்குதல்களுக்கான போதிய ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் எனவும் கிழக்குப் பொலிஸ் தரப்பு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதைத் தவிரவும் வேறு இரகசியமான தீவிரவாதத் தொடர்புகள் மூலமும் மேற்படி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்திருக்கலாம் என மேலும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் முகாம்கள், கருணா குழு முகாம்கள் மற்றும் தீவிரவாதத் தொடர்புகள் மூலம் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் ஆயுதங்களைச் சேகரித்துள்ளது பற்றி பரந்த தீவிர விசாரணைகளைத் தற்போது மேற்படி தீவிரவாதக் குழுவினர் எனச் சந்தேகப்பட்ட நபர்களிடமும் பிரதேசங்களிலும் மேற்கொண்டு வருவதாகவும் இதுபற்றிய உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் கண்டறியப்படும் எனவும் மேலும் கிழக்குப் பொலிஸ் புலன் விசாரணைப் பிரிவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கில் ஆயுதம் தரித்த முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் இயங்குவதாக ஏற்கனவே உறுதியான தகவல்கள் பொலிஸ் தரப்புக்குக் கிடைத்துள்ள காரணத்தாலேயே ஆயுதங்களை ஒப்படைக்கும்படி முன்னரே கிழக்கு மாகாண மத்திய பிரிவு பிரதிப் பொலிஸ் அதிபர் எடிசன் குணதிலக கடந்த 19 ஆம் திகதி பகிரங்க உத்தரவைப் பிறப்பித்திருந்தார். தற்போது அவ்வாறு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் ஆயதங்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான இறுதித் தினத்தை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி வரை நீடித்து அறிவித்துள்ளார். பொலிஸ் அதிபர் குணதிலக இதற்கேற்ப கிழக்கில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளிடம் இருக்கும் ஆயுதங்கள் முற்றாகக் களையப்படும் என கிழக்கு மத்திய பிரிவுப் பொலிஸ் அதிபர் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கில் இயங்குவதாகக் கூறப்படும் மேற்படி 18 முஸ்லிம் தீவிரவாத அமைப்பினரைத் தேடி நடத்தப்பட்டுவரும் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரி அனுராத சந்திரசிறியின் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபற்றித் தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கேற்ப இவ்வாறு கிழக்கில் பரந்து செயற்படுவதாகக் கூறப்படும் குறிப்பாக மட்டக்களப்பு, காத்தான்குடி, அம்பாறை பகுதிகளில் செயற்படும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் தமக்குள் தொடர்பாகவோ அல்லது தொடர்பின்றியோ செயற்பட்டாலும் முஸ்லிம் அமைப்புகள் என்றவகையில் ஒரே நோக்கத்துடனேயே செயற்படும் எனவும் இவை அனைத்துமே மேற்படி கிழக்கு மத்திய பிரிவு பொலிஸ் அதிபரின் கட்டளைக்கு ஏற்ப தம்மிடமிருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதெனவும் இவ்வாறு ஆயுதம் தரித்த முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளோ வேறு அமைப்புகளோ கிழக்கில் செயற்படும் சூழ்நிலை உள்ளவரையில் கிழக்கில் சுமுகநிலை முற்றாக ஏற்பட முடியாது எனவும் விமர்சிக்கப்படுகிறது.

வாசகர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,510 other followers